• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Dec 3, 2023

நற்றிணைப் பாடல் 310:

விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே – வல்லை,
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?

பாடியவர் : பரணர்

திணை : மருதம்

பொருள் :

விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய களிற்றி யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே! மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ?