• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முதல் தகவல் அறிக்கை (F.I.R) – தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !

Byவிஷா

Nov 27, 2023
முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். 
முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். 

குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இது பற்றிக் கூறுகிறது. “ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்”.
காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல் நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே
(1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bail able)மற்றும்
(2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் (Non – Bail able)ஆகும்.
பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள்.
எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.
காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.
சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது.
அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும்.