• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 295:

Byவிஷா

Nov 8, 2023

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள்,
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த,
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை,
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம்
இள நலம் இற்கடை ஒழியச்
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே.

பாடியவர் : ஒளவையார்
திணை : நெய்தல்

பொருள்:

 வளம் முரிந்த மலைக்காடு. அதில் நெருக்கப்பட்டு வாடிக்கிடக்கும் கொடி. அந்தக் கொடி போலப் புறப்பகுதி அழகழிந்து தழைத்துத் தாழ்ந்திருக்கும் கூந்தல். இப்படிக் கூந்தலை உடைய தோழிமாருடன் நான் இல்லப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருப்பதால் வருந்துகின்றோம். என் தாய்க்கும் இது தெரியும். தெரிந்தும் தன் அரிய  பாதுகாப்பில் வைத்திருக்கிறாள். தந்தை வேறு பல நாடுகளுக்குக் காற்றில் செலுத்தித் திரும்பிய பல வேலைப்பாடுடைய நாவாய்க் கப்பலைத் துறையில் நிறுத்திக்கொண்டிருக்கிறான். பொங்கும் மடைநுரை கொண்ட கள்ளுச்சாடி போன்று மயங்க வைக்கக் கூடியது என் இளமை நலம். அந்த இளமை என் இல்லத்துப் புழக்கடையில் கிடக்கும். பிறரை மணந்துகொள்ளாமல் முதிர்ந்து கிடக்கும். பெருமானே! நீ வாழ்க. தலைவி சொல்வதாகத் தோழி இவ்வாறு கூறுகிறாள். தலைவன் தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து.