• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Aug 3, 2023

நற்றிணைப் பாடல் 221:

மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க – பாக! – நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
‘வந்தீக, எந்தை!’ என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

பாடியவர்: இடைக்காடனார்
திணை: முல்லை

பொருள்:

பாகனே வரும்விருந்தை எதிரேற்க விருப்பங் கொண்ட பெரிய தோளையுடைய இளமையுற்ற எங் காதலி; மின்னல் போல் ஒளிவிடுதலையுடைய விளங்கிய அணிகலன்களால் எமது நல்ல மாளிகை யெங்கும் விளங்காநிற்ப நாட்காலையில் நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்ணையுமுடைய புதல்வன்; தூங்குமிடத்திலே சென்று உடம்பிலுள்ள துவட்சியோடு அப் புதல்வனை நெருங்கி நோக்கி; “எந்தாய்! வருக” என்று அழைக்கின்ற அழகிய இனிய வார்த்தையை நாம் கேட்டு மகிழும்படி; நீலமணியாற் செய்துவைத்தாற் போன்ற கரிய நிறத்தையுடைய கருங்காக்கணங்கொடி ஒள்ளிய காந்தளுடனே தண்ணிய புதல்தோறும் மலர்ந்து அழகுசெய்ய; பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகையுடைய நல்ல மலரையுடைய சரக் கொன்றையின் ஒள்ளிய பூங் கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தூங்காநிற்ப; இவற்றால் நறுநாற்றத்தைப் பரப்பினாற் போன்ற சிவந்த முல்லை நிலத்தில்; நீர் அமையப் பெற்ற பெரிய வழியின் நீண்ட இடமெங்கும் சுவடு பிளப்ப இயங்குந் தொழிலையுடைய நினது நெடிய தேர் விரைவிலே செல்வதாக.