• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 21, 2023

சிந்தனைத்துளிகள்

யானைக்கு வந்த திருமண ஆசை:

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்கு சென்று பயிர்களை அளித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.
தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட துணிச்சல் வரவில்லை.
அவர்கள் முல்லாவைச் சந்தித்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி எதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி “நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்” என்றார்.
ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்” என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.
நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப்போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.
முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.
“என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? என்று கோபத்துடன் கேட்டார்.
முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி “மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிட்டது மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு எதாவது தாறு மாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகதான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம்” என்றார்.
“என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?” என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.
மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒருதடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் எதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார். மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.
வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.

மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் ஆணையிட்டார்.
முல்லாவுக்கு ஊர் பொது மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்த்தினார்கள்.