• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மார்ச்-6ல் முதல்வர் ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு மாநாடு மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 6-ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.
தோள்சீலை எழுச்சிப் போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியது. அதன்பின்னர் தான் மேலாடை அணியும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது. தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு மாநாடு நாகர்கோவில் நாகராஜா திடலில் மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்கின்றனர்.
தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 6-ம் தேதி மாலை நாகர்கோவில் வருகிறார். மாநாட்டில் பங்கேற்ற பின்னர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். அடுத்த நாள் 7-ம் தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை திறந்து வைக்கிறார். விழா ஏற்பாடுகளை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.