• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

வாணிஜெயராம் பாடியபாடல்களில் காலம் கடந்தும் இருக்கப்போகும் பாடல்கள்

சனிக்கிழமை காலை(4.02.2023) காலமான பிரபல பின்னணி பாடகிவாணி ஜெயராம் ஆயிரக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் காலம் கடந்தும், மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் முதல் பத்து பாடல்களும் அவற்றின் பின்னணியும்

  1. மல்லிகை என் மன்னன் மயங்கும்

1974ல் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், வாலி பாடலை எழுதியிருந்தார். முத்துராமனும் கே.ஆர். விஜயாவும் இந்தப் பாடலைப் பாடி நடித்திருந்தார்கள். பாடலில் ஆண் குரல் கிடையாது. இதற்கு முன்பாகவே தமிழில் வாணி ஜெயராம் பாடியிருந்தாலும் இந்தப் பாடல்தான் அவரை எல்லோரும் கவனிக்க வைத்தது.

  1. ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்:

கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடலை எழுதியிருந்தார். இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகத்தில் இடம்பெற்றிருந்தன. பந்துவராளி, சிவரஞ்சனி, சிந்து பைரவி, காம்போதி ஆகிய நான்கு ராகங்கள் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தன. மிகச் சிக்கலான கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு கட்டியம் கூறுவதைப் போல இடம்பெறும், இந்தப் பாடல் மிக அபூர்வமான இசையையும் வரிகளையும் கொண்டிருந்தது. ஸ்ரீவித்யா இந்தப் பாடலைப் பாடுவதைப் போல திரைப்படத்தில் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார் வாணி ஜெயராம்.

  1. மானச சஞ்சரரே:

சங்கராபரணம் படத்தில் இடம் பெற்ற பாடல் இது. ஸ்வாமி சதாசிவ ப்ரஹ்மேந்திரரால் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தில் மஞ்சு பார்கவி பாடுவதைப் போல இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. மிக மிக அற்புதமாக பாடப்பட்ட இந்தப் பாடலுக்கும் சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

  1. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது: வாணி ஜெயராம் என்றவுடன் பலருக்கும் நினைவில் வரும் முதல் பாடல் இதுவாகத்தான் இருக்கும். கே. ரங்கராஜ் இயக்கத்தில் மோகனும் ராதாவும் நடிக்க வெளிவந்த நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் இடம்பெற்ற பாடல் இது. சங்கர் – கணேஷ் இசையமைக்க, இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். வாணி ஜெயராமின் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது.
  2. நானே நானா யாரோ தானா: வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் புகழ்பெற்ற மற்றுமொரு பாடல். 1979ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடலை எழுதியது வாலி. ஜெய் கணேஷும் லதாவும் இந்தப் பாடலின் காட்சியில் இடம் பெற்றிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்றிருந்த “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாடலும் கேட்போரை உருக வைக்கக்கூடியது.
    • இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984ல் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் பாடலை எழுதியிருந்தார். ஜெயச்சந்திரனுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருந்தார் வாணி ஜெயராம். 80களின் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்து, வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது.
    • நினைவாலே சிலை செய்து 1978ல் வெளியான அந்தமான் காதலி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை கே.ஜே. யேசுதாஸும் வாணி ஜெயராமும் இணைந்து பாடியிருப்பார்கள். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதியிருந்தார். “திருக்கோவிலே ஓடிவா” என்ற வரியை கே.ஜே. யேசுதாஸ் தெருக்கோவிலே ஓடிவா என உச்சரித்ததாக சிலர் உணர்வதுண்டு. ஆனால், வாணி ஜெயராமின் குரல் துல்லியமாக ஒலிக்கும்.
    • என்னுள்ளில் ஏதோ ஏங்கும் ஏக்கம்

    1979ல் வெளிவந்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைக்க கங்கை அமரன் பாடல் எழுதியிருந்தார். தான் இன்னும் சிறப்பான ஒரு வாழ்க்கைக்கு தகுதியானவள் என நினைக்கும் நாயகியின் மன உணர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் கங்கை அமரன். “என் மன கங்கையில் சங்கமிக்க, சங்கமிக்க பங்கு வைக்க, பொங்கிடும் பூம்புனலில், பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின், போதையிலே மனம், பொங்கி நிற்க தங்கி நிற்க, காலம் இன்றே சேராதோ” என்ற வரிகளில் வாணி ஜெயராமின் குரல் அந்த ஏக்கத்தின் உச்சத்தைத் தொடும்.

    1. மேகமே மேகமே

    1981ல் வெளிவந்த பாலைவனச் சோலை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், தமிழ்த் திரையிசையில் ஒரு அபூர்வமான பாடல். சங்கர் கணேஷ் இசையில் பாடலை எழுதியவர் வைரமுத்து. சுஹாசினியும் சந்திரசேகரும் இந்தப் பாடலில் நடித்திருந்தனர். ஒரு கஸல் பாடலைப் போல ஒலிக்கும் இந்தப் பாடல், 80களின் துவக்கத்தில் இளைஞர்களின் இதய ராகமாக இருந்தது. இந்தப் பாடலில் இடம்பெற்ற “தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களில் ஏதும் எழுதாது தினம் கனவு எனதுணவு நிலம் புதிது விதை பழுது எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்” என்ற வரிகளை இப்போதும் வாணி ஜெயராமின் அஞ்சலிக் குறிப்புகளில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    1. ஒரே நாள் உனை நான்

    1978ல் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைக்க, வாலி பாடலை எழுதியிருந்தார். எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து வாணி ஜெயராம் இந்தப் பாடலை பாடியிருந்தார். கமல்ஹாசனும் ஸ்ரீப்ரியாவும் இந்தப் பாடலில் நடித்திருந்தனர். அந்த காலகட்ட காதலர்களின் தேசிய கீதமாக இந்தப் பாடல் இருந்தது. “நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன், நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன், கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம், மழை நீ நிலம் நான் தயக்கமென்ன” என்ற வரிகள் வானொலியில் ஒலிக்கும்போது மயங்காதவர் இல்லை.