• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நகைச்சுவை ஜாம்பவான் நடிகர் நாகேஷின் நினைவுதினம் இன்று..!

Byவிஷா

Jan 31, 2023

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து திரையுலகத்தில் உயர்ந்து நின்றவர். நடிகர் மட்டுமல்ல. அவர் தான் தமிழ் சினிமா உலகின் சிரிப்பு என்பது. சார்லி சாப்ளின் போல உடலினாலும், உடல் அசைவினாலும், வசனங்களாலும் நடித்து கைத்தட்டல்களை அள்ளியவர் இந்திய சினிமா உலகில் நாகேஷ் மட்டுமாகத் தான் இருப்பார் என்றால் மிகையில்லை!
நடிகர் சந்திரபாபுவுக்கு பின்னர் நாகேஷின் கடினமான நடன அசைவுகளை, அவரோடு சேர்ந்து நடித்த எந்த ஒரு நடிகராலும் நெருங்க முடியாமல் போனது என்றே கூறலாம்.எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரஜினி, விஜய், தனுஷ் என பல தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து 1000 படங்களுக்கு மேல் நடித்து வரலாறு படைத்தவர் நமது நாகேஷ்.
நாகேஷ் எந்தப் படத்திலும் டைரக்டர் பிடியில் அகப்பட்டுக் கொள்ளாமல், தனக்கென்று ஒரு பரிணாமத்தை உருவாக்கி வெளிப்படுத்தி பெயர் வாங்கினார். நாகேஷ் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் மைசூர் அருகே உள்ள கொழிஞ்சிவாடி என்ற இடத்தில் 1933-ம் வருடம், செப்டம்பர் மாதம் 27-ந் தேதி பிறந்தவர். இயற்பெயர் நாகேஷ்வரன். செல்லப்பெயர் குண்டுராவ். தந்தை கிருஷ்ணராவ், தாயார் ருக்மணி. அப்பா ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் என்பதால் ஊர், ஊராகப் பணியாற்ற குடும்பம் மட்டும், தமிழ்நாட்டில் ஈரோடு அருகேயுள்ள தாராபுரத்தில். பீமாராவ் அக்ரகாரம் தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில். இளம் வயதிலேயே வீட்டில் கோபித்துக் கொண்டு ஐதராபாத் சென்றவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி, மில் என பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறார்.
சினிமா உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக நாடக உலகம் தான். அவரைப் பட்டை தீட்டியது. முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்து மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பரிசையும் பாராட்டையும் பெற்றவர் நாகேஷ்.கோவையில் பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்தபோது 3 முறை அடுத்தடுத்து அம்மை போட்டு, முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு, நடித்து பலரது முகங்களில் சிரிப்பை வரவழைத்தவர் நாகேஷ் மட்டும் தான்.நாகேஷ், ரெஜினா என்ற கிறிஸ்தவப் பெண்ணை மணந்தார்.

ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ் பாபு என மகன்கள். அவர்கள் 3 பேரும் வௌ;வேறு மதங்களில் திருமணம் செய்து கொண்டபோது மனதார ஆசி வழங்கிய பரந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் நாகேஷ்.முதல்முதலாக தாமரைக்குளம் படத்தில் அறிமுகமானபோது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குனர்கள் கடிந்தபோது, எம்.ஆர்.ராதாவிடம் இவர் வருத்தப்பட்டிருக்கிறார்.
அப்போது அவர், “மத்தவன் எல்லாம் நடிகனய்யா.. நீ கலைஞன், கவலைப்படாமல் நடி” என்று சொன்னாராம். நடனம் கற்காமலே நடனமாடி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் நாகேஷ்.
நாகேஷ் மாபெரும் நட்சத்திரமாக உருவானதில் பெரும் பங்கு மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு உண்டு. அவரது முதல் படமான நீர்க்குமிழியில் நாகேஷ்தான் நாயகன். சேது என்ற புற்றுநோயாளி பாத்திரத்தில் அவர் தோன்றி நடித்தது, அதிலும் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலம்தான் சொந்தமடா” பாடல் காட்சியில் அவரது நடிப்பு இன்றும் நினைவில் நிற்கிறது.
சர்வம் சுந்தரம் படத்தில் ஓட்டல் சர்வராக நடித்து, பின்னர் திரையுலகில் கொடி-கட்டிப் பறக்கும் நாயகனாக நடித்து அசத்தி இருப்பார். ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்து நடிக்கப்போனதால், அவர் தாய் மறைந்தபோது அவரது உடலைப் பார்க்கக்கூட நாகேஷ் அனுமதிக்கப்படாதது துயரம்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்‘ படத்தில் வார்டு பையனாக குட்டி பத்மினி-யுடன் அவர் இணைந்து நடித்தது. ‘பட்டினத்தில் பூதம்‘ படத்தில் ரமாபிரபாவுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் நெஞ்சில் நினைத்து நினைத்து இன்றும் சிரிக்க வைக்கின்றன.‘பட்டணத்தில் பூதம்‘ படத்தில் ரமாபிரபா “மாமா ஆசையாக வாங்கிய நாய்க்கு பேருகூட வச்சாரு… நாய் செத்து போச்சு” என சொல்லி வருந்தியபோது நாகேஷ், “பேரு வச்சார் மாமா, சோறுவச்சாரா?” என்று கேள்வி கேட்பது அசத்தல். இப்படி சொந்த வசனங்களை படங்களில் அவர் அந்தந்த காட்சிக்கு ஏற்ப உருவாக்கி பேசியது தனி முத்திரை பதித்ததாகும்.

நடிகர் திலகம் சிவாஜியுடன் அவர் ‘திருவிளையாடல்’ படத்தில் தோன்றி நடித்த தருமி பாத்திரம், ‘தில்லானா மோகனம்பாள்’ படத்தில் தோன்றிய வைத்தி பாத்திரம், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் டி.எஸ். பாலையாவுக்கு கதை சொல்லும் செல்லப்பா என்ற பாத்திரம் என அவர் நடித்த அத்தனை பாத்திரமும் இன்றைக்கும் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றன.

‘திருவிளையாடல்’ படத்தில் நாகேஷ் நடித்த காட்சிகளை போட்டு பார்த்தபோது அந்தப் படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் நடிகர் திலகம் சிவாஜி, “நாகேஷ் நடித்த எந்தக் காட்சியையும் கட்பண்ணிடாதீங்க” என்று கேட்டுக்கொண்டாராம்.


‘ஊட்டி வரை உறவு’ படத்தில் பாலையாவுடன் கே.ஆர்.விஜயாவை கண்டுபிடிப்பது பற்றி உரையாடும் வசனங்களை மறக்க முடியாது. மனோரமா, சச்சு, ரமாபிரபா என அன்றயை நகைச்சுவை நடிகைகள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியவர் நாகேஷ் மட்டும்தான்.
அதே போன்று மறைந்த புரட்சித் தலைவருடன் 45 படங்களில் நடித்த ஒரே நகைச்சுவை நடிகர் நாகேஷ் மட்டும் தான். நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல. குணச்-சித்திர நடிப்பில் மட்டு-மல்ல, டைரக்ஷன் துறையையும் நாகேஷ் விட்டு வைக்கவில்லை. அவர் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.
நாகேஷ் அவர்களை ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர் தான் சினிமாவில் ̧ழைந்து கால் பதிக்கத் தான் பட்ட பாடுகளையெல்லாம் அவருக்கே உரிய விதத்தில் விவரித்தது மறக்க முடியாதது.
நான் குழந்தையாக இருந்தபோது பார்த்து ரசித்த ஒரு நடிகர், வளர்ந்த நிலையில், அவரது அனுபவங்களை சொன்னது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. தன் சொந்த வாழ்க்கையில் நாகேசுக்கு எத்தனையோ சோகங்கள் உண்டு. அத்தனையையும் தாங்கிக்கொண்டு நடித்து மற்றவர்களை சிரிக்க வைப்பதில் அலாதியான திருப்தியை கண்டார்.
நாகேஷ் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ரூந் தேதி அமரரானார். ஆனால் இன்றளவும் அவர் தன் படங்களால் நம்முடன் வாழ்ந்து-கொண்டிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறதே தவிர அவர் இல்லை என்ற குறையே இல்லை என்று கூறலாம்.