• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Jan 30, 2023

நற்றிணைப் பாடல் 104:

பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல் பானாள்
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர்
போக்கு அற விலங்கிய சாரல்
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே

பாடியவர்: பேரி சாத்தனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

அவன் வரும் வழியின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் அவன் மார்பை விரும்பும் என்னைப் போன்றோர் வேறு யாராவது இருக்கிறார்களா என்று அந்தக் காதலி நினைக்கிறாள்.
அழகிய வரிக்கோடுகளையும், பிளந்த வாயையும் உடைய ஆண்-வரிப்புலி யானையோடு போரிடுகிறது. அங்கே இருந்த பெரிய பாறைமீது ஏறி நின்று பார்க்கும் மகிழ்ச்சியில் குறவர்-சிறுவர்கள் தாம் விளையாடும் சிறிய தொண்டகப்-பறையை முழக்குகின்றனர். அந்தப் பறையொலி தினைப்புனத்தில் மேயும் கிளிகளை ஓட்டுகிறது. இப்படிப்பட்ட ஆரவாரம் மிக்க மலைநாட்டின் தலைவன் அவன். அவன் மார்பைத் தழுவ விரும்புகிறேன். என்னைப் போல வேறு யாராவது இருக்கிறார்களா?

பார்ப்பதற்கே அச்சம் தரும் மலைச்சாரலில் உள்ள சிறிய வழியில் அவன் வருகிறான். மலைப் பிளவுகளில் பாம்பு இருக்கும் வழியில் வருகிறான். இடி தாக்கும் வேளையில் வருகிறான். இவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் நான் அவனை விரும்புகிறேனே!