• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ராங்கி – விமர்சனம்

இணையதள செய்தி ஊடகத்தில் செய்தியாளராக பணிபுரியும் த்ரிஷாவின் 16 வயது நிரம்பிய அண்ணன் மகளுக்கு முகநூல் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அதனை சரிசெய்ய முயற்சிக்க முயலும்போது அது உலக அளவிலான இன்னொரு சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது.

அவற்றை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ராங்கி.
படத்தின் பெயருக்கேற்ற வேடம் த்ரிஷாவுக்கு. நடை உடை பாவனைகளில் துணிச்சல்,உடல்மொழியில் ஓர் அலட்சியம், காவல்துறையுடன் அநாயசமான மோதல் என த்ரிஷா நடிப்புக்குபெருமை சேர்க்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன.புல்லட்டில் அவர் பயணிப்பதும் அதிலுள்ள ஒளிப்பதிவுக்கருவியும் சிறப்பு துனிஷியாவில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு நடுவில் த்ரிஷாவின் செயல்கள் அவரை முழுமையான (ஆக்‌ஷன் ஹீரோயின்) சண்டை நாயகியாக்கியிருக்கின்றன.
த்ரிஷாவின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் அனஸ்வராராஜனின் அப்பாவித்தனம் அந்த வேடத்துக்குப் பலம்.அவரால்தான் எல்லாமே என்பதை கடைசிவரை உணராத பாத்திரவடிவமைப்பு. அதை உணர்ந்து நடித்து பலம் சேர்க்கிறார்.காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்மகேந்திரன் கவனிக்க வைக்கிறார்.படத்தில் மிகமுக்கியமான ஆலிம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உஸ்பெகிஸ்தான் நடிகர் நன்று. அவருடைய பணிகளுக்கு நடுவில் சமூகவலைதளத்தில் இயங்குகிறார் என்பது இயல்புக்கு மாறானது என்றாலும் விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
அவருடைய உரையாடல்கள், அமெரிக்காவின் அடாவடி லிபியாவின் நிலை,முன்னாள் லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டது எப்படி? என்கிற விளக்கம் ஆகிய ஆழமான விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன.ஆலிம் குழுவில் இருக்கும் முன்னணிவீரர் கூறும், நாம் ஜெயித்தால்தான் போராளி இல்லையெனில் தீவிரவாதி என்கிற வசனம் முக்கியமானது.
சக்திவேலின் ஒளிப்பதிவில் உஸ்பெகிஸ்தான் காட்சிகள் சிறப்பு.அவருடைய ஒளிப்பதிவுக்கருவியின் விசாலப்பார்வை நமக்கு நல்ல காட்சி அனுபவங்கள்.
சி.சத்யாவின் இசையில் கபிலன் எழுதியுள்ள பனித்துளி பாடல் வரிகள் அழுத்தமானவை. கைகூடாத காதலின் வலிகளை வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் கபிலன்.பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை மேம்படுத்திக் காட்ட உதவியிருக்கிறது. ஆலிமின் காதல் உணர்வுகளின் போதான பின்னணி இசை இதம்.
தீவிரமாக நியாயம் பேசுகிறவன் தீவிரவாதி, உரிமையையும் தாழ்மையுடன் கேட்பதா? உள்ளிட்ட பல வசனங்களில் இயக்குநரின் சமுதாயக் கோபம் வெளிப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அமைச்சரின் பெட்ரோல் வியாபாரம் மற்றும் அதன் விளைவுகள் ஆகியன அதிர்ச்சியூட்டுகின்றன.
ஏராள வெட்டுகளுக்கு நடுவிலும் தான் எண்ணியதைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சரவணன்.