• Wed. May 1st, 2024

கடந்த 8 மாதங்களாக
கொரோனாவால் இறப்பு இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறுத்து நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவால் இறப்பு இல்லை. கடந்த 10 தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. கொரோனா உயிரிழப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக முதல்வர் மாற்றியதுதான்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 96 சதவீதத்தை கடந்த நிலையிலும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 92 சதவீதத்தை தொடும் நிலையிலும் உள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பிரத்யேக ஆய்வகம் தமிழகத்தில், சென்னையில், ரூ.4 கோடி செலவில் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம். சீனா, ஜப்பானில் ஒமைக்ரான் பரவிக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்ட சீர்காழியை சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா தனக்கு சிகிச்சை அளித்து, உயிரை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது. தற்போது, அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவி அபிநயாவிற்கு உரிய சிகிச்சை வழங்கப்படும். பத்திரிகை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *