• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Dec 16, 2022

நற்றிணைப் பாடல் 77:

மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்று மன்னே நெஞ்சே!-செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல்,
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.

பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி

பொருள்:

காதலன் காதலியின் அழகைப் பார்த்து அயர்ந்து தன் நெஞ்சுக்குக் கூறுகிறான்.

அரசன் மலையன் பகைவர் ஊர்களை அழித்த பின்னர் பெருமூச்சு விட்டு இளைப்பாறுவது போல இவளது பார்வையை வாங்கியதும், நெஞ்சே! வியந்து நிற்கிறாய் – என்கிறான்.

மலையன்
மலையன் தன் குதிரைமீது சென்றான். அவன் போரிடும்போது புலையன் துடி முழக்கும் இசை அவனுக்குத் துணைநின்றது. பிறருடைய நாட்டில் புகுந்தான். அவர்களது ஊரை அழித்தான். அதன் பின்னர் நிம்மதி கொள்ளும் பெருமூச்சு விட்டான். நெஞ்சே! இவளது ஒப்புதல் பார்வையைப் பெற்ற பின்னர் நீ நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாய்.
இடம்
செந்நிறச் சுளை கொண்ட வேர்ப்பலா கிளையெல்லாம் தொங்கும் இடம். அதன் சுளை கிடக்கும் முற்றம். அங்குள்ள மனையில் வாழ்பவள் அருவி விழும் ஒலியோசைத் தாளத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். துன்பம் தெரியாத சிற்றூர்ச் சேரி அது.
குறுமகள்
அவள் இளம்பெண். வாள் அரத்தால் அறுத்த சங்கு வளையலை முன்கையிலும், தொடியைத் தோளிலும் அணிந்துகொண்டிருக்கிறாள். அவள் இடையில் சுருக்கம். குவளைமலர் போன்ற கண். அவள் மகிழ்ச்சியோடு அந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாள். நெஞ்சே! இவள் பார்வையைப் பெற்றதும் உனக்கு நிம்மதிப் பெருமூச்சு. நன்று.