• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மலேசியா நாடாளுமன்ற தேர்தல்: எந்த
கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் மலேசியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மலேசியாவில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான சீர்திருத்தக்கூட்டணி 83 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி யாரும் எதிர்பாராதவிதமாக 73 இடங்களை கைப்பற்றியது. அதே சமயம் சுதந்திரம் பெற்றதில் இருந்து 2018-ம் ஆண்டு வரை மலேசியாவை ஆட்சி செய்து வந்த ஐக்கிய மலாய் தேசிய கூட்டணி வெறும் 30 இடங்களை பிடித்து படுதோல்வியை சந்தித்தது. ஆட்சி அமைப்பதற்கு 112 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசை அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. அதே சமயம் பெரும்பான்மையை பெற போதுமான ஆதரவு இருப்பதாக அன்வர் மற்றும் முகைதீன் ஆகிய இருவருமே கூறி வருகின்றனர். இந்த தேர்தலில் மலேசியாவின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான மகாதீர் முகமது தேசிய கூட்டணி வேட்பாளரிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.