• Wed. May 8th, 2024

உசிலம்பட்டி அருகே பறக்கும் படை அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 95,730 ரூபாய் ரொக்கம் பறிமுதல்

ByP.Thangapandi

Apr 6, 2024

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்ற உள்ள சூழலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் பொருட்டு ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடிப்பட்டி விலக்கு பகுதியில் உசிலம்பட்டி துணை தாசில்தார் கருப்பையா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த டி.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராஜலெட்சுமி என்ற பெண்ணை இடைமறித்து சோதனை செய்துள்ளனர். இதில் அவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த சுமார் 95 ஆயிரத்து 730 ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உசிலம்பட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்து அவர் மூலம் உசிலம்பட்டி கருவூலத்தில் வைத்தனர்.

மேலும் இராஜலெட்சுமி அத்திபட்டியில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க தனது தங்க நகையை கடந்த 4ஆம் தேதி வங்கியில் அடகு வைத்து, வைத்திருந்த பணத்தை இன்று ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

பணம் பறிமுதல் செய்யும் போது உரிய ஆவணம் இல்லாததால் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் வைத்துள்ளதாகவும், பணத்திற்கான உரிய ஆவணத்தை சமர்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அப்பெண்ணிற்கு உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *