புதுச்சேரியில் 27-ம் தேதி (நேற்று) பிறந்தநாள் விழாவை கொண்டாட இருந்த பிரபல லாட்டரி தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் ஏற்பாடுகளை கவனித்து விட்டு தனியார் திருமண மண்டபத்தில் இருந்து 26-ம் தேதி இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய, பாஜக பிரமுகர் உமா சங்கரை கருவடி குப்பம் செல்லும் சாலையில் வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த படுகொலை குறித்து வழக்கு பதிவு செய்த லாஸ்பேட்டை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மேலும் கொலை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள், செல்போன் டவரை ஆய்வு, செய்து 36 மணி நேரத்தில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த முது நிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன்.. மதுபானக்கடை திறப்பதில் முன் விரோதம்,கோவில் நிர்வாகிகள் நியமனம் மற்றும் நிலப்பிரச்சனையில், சாமிப் பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கருணாவுக்கும் பாஜக பிரமுகர் உமாசங்கருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த முன் விரோதம் காரணமாக இரண்டு, மூன்று முறை உமா சங்கரை கொலை செய்வதற்காக கொலை முயற்சிகளும் நடந்துள்ளது.
இதில் நான்காவது முறை தான் 26ஆம் தேதி பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்த எஸ்.எஸ்.பி கலைவாணன், உணவு விநியோகம் செய்யும் சுமேட்டா ஊழியர் போன்று சட்டை அணிந்து கொண்டு பின் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி விசாரணை அடிப்படையில் லாஸ்பேட்டை சாமி பிள்ளை தோட்டத்தை செல்வகணபதி, பாண்டியன் பாலாஜி, கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன், வெற்றி என்கிற விவேகானந்தன், அருண் என்கிற அருண்குமார், விஸ்வநாத், அரவிந்தன், கார்த்திக் ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலையில் 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இதில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், முக்கிய குற்றவாளியாக கருணா உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
பாஜக பிரமுகர் கொலையில் அமைச்சர் சாய் சரவணன் குமாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை,இவ்வழக்கு சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது,
உமா சங்கர் கருணாவுடன் பகை குறித்து குடும்பத்தினருக்கே தெரியவில்லை,போலீசாரின் விசாரணையில் தான் தெரியவந்துள்ளது என்று தெரிவித்த எஸ். எஸ். பி. கலைவாணன் முக்கிய குற்றவாளி கைது செய்யும் போது தான் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் தெரியவரும் என்றார்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய கத்திகள் (வீச்சு அருவாள்), மொபைல் போன்கள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.