• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மன்மோகன் சிங் மறைவு… மத்திய அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

ByP.Kavitha Kumar

Dec 27, 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று இரவு 9.51 மணியளவில் காலமானார். இதனையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங் கடந்த 1932 செப்​.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்​போது பாகிஸ்​தானில் உள்ளது) பிறந்​தவர். காங்​கிரஸ் மூத்த தலைவர்​களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்​ம​ராவ் தலைமையிலான அமைச்​சர​வை​யில் நிதி அமைச்​சராக பதவி வகித்​தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியா​வின் பொருளாதார தாராளமய​மாக்கல் கொள்​கை​யின் தொடக்​கத்​துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கி​யின் கவர்னராக​வும் பதவி வகித்​துள்ளார். காங்​கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்​போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவி வகித்​தார். உடல்நலக்குறைவால் நேற்று அவர் காலமானார்.

மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மன்மோகன் சிங் மறைவையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.