திருநள்ளாறில் ஒரு மாத பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கருக்கங்குடியில் உள்ள ஒரு தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாததால் தமிழகத்திலிருந்து புரோக்கர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு மாத பெண் குழந்தையை வாங்கி உள்ளதாக திருநள்ளாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வந்த நிலையில், ஒரு மாத பெண் குழந்தை விற்பனை செய்த கும்பல் மற்றும் ஒரு மாத பெண் குழந்தைக்கு காரைக்கால் நகராட்சியில் போலியான பிறப்புச் சான்றிதழ் எடுத்துக் கொடுத்த நகராட்சி ஊழியர் உட்பட 10 பேரை கடந்த 11ஆம் தேதி திருநள்ளாறு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஒரு மாத பெண் குழந்தைக்கு சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த மருத்துவச்சி ஜோதி உள்ளிட்ட 6 முக்கிய குற்றவாளிகளை திருநள்ளாறு போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புரோக்கர் ஃபரிதா பேகம் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் போலி பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் பெயரை வழக்கில் சேர்க்காததும் ஒருவேளை அந்த தனியார் மருத்துவமனையின் பெயரை போலியாக பயன்படுத்தியிருந்தால் அந்த மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்காதது ஏன் எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.