• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு 50,000-உயர்நீதிமன்றம் உத்தரவு

Byகாயத்ரி

Nov 9, 2021

கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின் படி உரிய இழப்பீட்டை வழங்கக் கோரி விஜய கோபால் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்ட விதிகளின்படி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு எவ்வளவு இழப்பீடு வழங்க உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது என பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதித்து 36,220 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிற மாநிலங்களில் கூடுதல் இழப்பீடு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கூடுதலாக இழப்பீடு வழங்க எந்த தடையும் இல்லை எனவும், கூடுதல் எவ்வளவு வழங்குவது என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.