• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

500 பேருக்கு சொர்க்கவாசல் தரிசனம் இலவசம்

Byவிஷா

Jan 4, 2025

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ரூ.500க்கு கட்டணச்சீட்டும், 500 பேருக்கு இலவசமாக சொர்க்கவாசல் தரிசனம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், கோயிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு துறை அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகின்ற ஜன. 10, 11 ஆகிய இரு நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. காவல் துறை சார்பில் 600 போலீஸார் வீதம் 3 பகுதியாக சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், கோயிலைச் சுற்றி 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 5 இடங்களில் மருத்துவ முகாம்கள், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். மேலும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் வரிசை அமைப்பானது (கியூ) நீட்டிக்கப்படும். அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும்.
கோயில் குளம் அருகிலும் நரசிம்மர் சந்நிதி பின்புறமும் 20 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 8 மணிமுதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணிமுதல் 4 மணி வரையிலும் கோயிலின் பின் கோபுர வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் சார்பில் குப்பையை உடனுக்குடன் அகற்ற 100 தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவர். சொர்க்க வாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும். அதற்கான தரிசன கட்டணச் சீட்டை ரூ.500-க்கு ஆன்லைனில் ஜனவரி 6-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் 1,500 கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும். மேலும், முதலில் வரும் 500 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு என்.கே.டி.பள்ளி மற்றும் ராணி மேரி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.