விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கண்ணா நகர் உள்ளது.இங்கு வசிப்பவர் தவசிக் குமார் ( வயது 56). அச்சகத் தொழில் செய்து வரும் இவரது மனைவி பாண்டிமாதேவி ( வயது 50 ) உணவியல் நிபுணராக உள்ளார்.


இந்தத் தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணமாகி பேரன்கள் உள்ளனர். தனது 37-வது வயதில் உடலைப் பேணிக் காக்க உடற்ப் பயிற்சி எடுப்பதில் ஆர்வம் கொண்ட பாண்டிமாதேவி, உடற்பயிற்சி நிலையங்களில் உடலை வருத்தி அன்றாடம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.


கடந்த (நவம்பர்) மாதம் 30 -ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளுத் தூக்கும் போட்டிகளில் பங்கேற்றார். 20 நாடுகளிலில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டிருந்த போட்டிகளில், இந்தியாவிலிருந்து சென்ற 19 பேர்களில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து பாண்டிமாதேவி மட்டுமே இந்திய அணிக்காக பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியின் போது 40- வயதிலிருந்து 50- வயதுக்குட்பட்டோருக்காண தனிப்பிரிவில் 310- கிலோ எடையை லாவகமாகத் தூக்கி முதலிடம் வகித்து தங்கப் பதக்கத்தை வென்றதுடன், சான்றிதழையும் பெற்றார். சாதனை படைத்து ஊர் திரும்பிய பாண்டிமா தேவியை அவர் பயிற்சி பெற்று வரும் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள சக வீரர் வீராங்கனைகள் அவரை வரவேற்று கேக் வெட்டிக் கொண்டாடியதுடன் வாழ்த்துக்களையும், பாராட்டுதழையும் தெரிவித்தனர்.

சாதனைப் படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல. எந்த வயதிலும் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். 37- வயதிற்குப் பிறகு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் தூண்டப்பட்ட தனக்கு 50 -வயதில் சாதனை படைக்க சந்தர்ப்பம் கிடைத்ததை பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக பெருமை கொள்கிறேன். வரும் காலங்களில் மென்மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனைப் படைக்க ஆசைப்படுகிறேன் என 50 வயதில் சாதித்த பெண்மணி பாண்டிமாதேவி தெரிவித்துள்ளார்.




