தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த வழக்கில் வங்கி பெண் அதிகாரி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன், ஏ.டி.எம் கார்டு, உட்பட 129 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் ஜோஜூ மேத்யூ. தனியார் நிறுவன ஊழியர். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. உடனே அவர் அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்பொழுது மறுமுனையில் பேசிய நபர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் கூறினார். அதை நம்பிய அவர் முதலீடு செய்ய சம்மதத்தார். உடனே ஜோஜூ மேத்யூக்கு செல்போன் செயலியின் ஐ.டி மற்றும் ரகசிய எண் கொடுக்கப்பட்டது. அதில் அவர் பல்வேறு தவணைகளாக ரூபாய் 50 லட்சம் முதலீடு செய்தார்.
அவர் ஒவ்வொரு முறையும் முதலீடு செய்த போது லாபத்தொகை சேர்க்கப்பட்டதாக செயலில் காட்டியது. அவர் அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்ற போது முடியவில்லை, அப்பொழுது ஏமாற்றப்பட்டது அறிந்தவர், கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சிவக்குமார், ஓசூரைச் சேர்ந்த குமரேசன், ஓசூர் கரப்பள்ளியைச் சேர்ந்த நித்தியா ஆகிய மூன்று பேர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் நித்தியா தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த மூன்று பேரும் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துவது போல், ஜோஜூ மேத்யூ இடம் பேசி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. உடனே காவல் துறையினர் அந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், ஒன்பது சிம் கார்டுகள், 25 ஏ.டி.எம் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகம், 62 காசோலை புத்தகம் உள்ளிட்ட 129 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும் போது,
கைதான மூன்று பேரும் சேர்ந்து பலரிடம் பேசி பணத்தை வசூல் செய்து கம்போடியாவில், இருக்கும் நபருக்கு கொடுத்து உள்ளனர். மூன்று பேரும் மொத்தமாக ரூபாய் 90 லட்சம் மோசடி செய்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.