கோவை, ஒண்டிப்புதூர் அருகே உள்ள பைபாஸ் சாலையில் லாரியை மதுபோதையில் ஓட்டி வந்த ஓட்டுநர் முன்னாள் சென்ற ஈச்சர் லாரி மீது மோதியதில், அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த மற்ற வாகன ஓட்டுகள், செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

தமிழக – கேரளா மாநிலத்தை இணைக்கின்ற முக்கிய சாலையாக கோவை எல்.என்.டி பைபாஸ் சாலை உள்ளது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான சரக்கு வாகனங்கள் மற்றும் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை கேரளாவில் இருந்து சேலம் நோக்கி செல்லும் சாலை ஒண்டிப்புதூர் அருகே மது போதையில் வந்த லாரி ஓட்டுநர் முன்னாள் சென்ற ஈச்சர் லாரி மீது மோதியது.
அந்த லாரி மோதிய வேகத்தில் ஈச்சர் லாரிக்கு முன்பு சென்று கொண்டு இருந்த அடுத்தடுத்து கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. உடனடியாக லாரியில் இருந்து இறங்கி தப்பிய ஓட்டுனர், அருகில் இருந்த புதருக்குள் சென்று பதுங்கி இருந்தார். லாரி ஓட்டுநரை தேடிய மற்ற வாகன ஓட்டுநர்கள் அவர் அருகே இருந்த இருட்டான பகுதியில் மறைந்து இருப்பதை கண்டு அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து சிங்காநல்லூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுநர் மது போதையில் லாரியை இயக்கி அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.






