விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தனியார் தோப்பிற்குள் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த ஏராளமான வெடி பொருட்கள், மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் ஏசுதாஸ் 43. பட்டாசு தொழில் செய்து வந்தார். அங்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ரெய்டு அதிகரித்ததால் தொழிலுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கருதினார். எனவே அதிகாரிகள் தொந்தரவு இல்லாத ஒதுக்குப்புறமான பகுதியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். தனது நண்பரான கூமாப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து 28 என்பவரிடம் ஆலோசனை செய்தார். இதில் மாரிமுத்துவின் மற்றொரு நண்பரான வத்திராயிருப்பு, சேது நாராயணபுரத்தை சேர்ந்த தங்கேஸ்வரன் 49 என்பவரை அறிமுகப்படுத்தினார். மூவரும் செய்த ஆலோசனையின் படி தங்கேஸ்வரன் சின்ன கூட்டம் மலைக்கு பின்புறம் உள்ள தனது மாந்தோப்பில் வைத்து பட்டாசு தயாரிக்க ஒப்புக்கொண்டார்.
மூவரையும் பங்குதாரர்களாக கொண்டு கடந்த மாதம் அங்கு பட்டாசு சட்டவிரோதமாக தயாரிக்க தொடங்கினர். இது தொடர்பாக போலீசாருக்கு வந்த தகவலின் படி நேற்று அப்பகுதிக்கு ரெய்டு சென்ற வத்திராயிருப்பு போலீசார் அங்கு ஏராளமான கரி மருந்து மூடைகள், வெடிபொருட்களுடன் பட்டாசு தயாரிப்பு நடந்து கொண்டிருந்ததை கண்டனர். மூவரையும் கைது செய்து வெடி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேது நாராயணபுரம் ஆர் சி தெருவை சேர்ந்த சின்னப்பர் 28 என்பவரது வீட்டிலும் அதே தெருவை சேர்ந்த சாந்தி 43 என்பவரது வீட்டிலும் ஏராளமான திரி மூடைகள், கரி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு அங்கும் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்து வந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.