ராஜபாளையம் அருகே மது போதையில் கூலித் தொழிலாளியை அடித்து கொலை செய்த 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன்(33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், கணைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மாரியப்பன் பழைய பாட்டில் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை ராஜபாளையம் – தொட்டியபட்டி சாலையில் அழகாபுரி தக்காளி தோப்பு பகுதியில் தலையில் ரத்த காயத்துடன் மாரியப்பன் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் மாரியப்பன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்த முத்துலிங்கம்(25), டேனியல்(22), தங்கபாண்டியன்(25), அழகை நகரை சேர்ந்த சங்கிலிராமன்(20), அழகுலோகநாதன்(19) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்: இந்த வழக்கில் கைதான 5 பேரும் மாரியம்மன் உடன் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து மது பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் கைதான முத்துலிங்கம், வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் கடந்த ஜூன் மாதம் சோலைராஜ் என்பவரை கொலை செய்த வழக்கு, கஞ்சா விற்பனை, பேருந்து கண்ணாடி உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது, என்றனர்.




