டெல்லியில் இன்று (ஜன. 11) காலை அடர்த்தியான மூடுபனி காரணமாக 45 ரயில்கள் தாமதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே வட இந்தியாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நிலவி வந்த நிலையில், தற்போதைய பனிப்பொழிவு காரணமாக எதிரே இருப்பதை தெளிவாக பார்க்க முடியாத நிலை உள்ளது.
டெல்லி சஃப்தர்ஜங் சாலை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை உள்ளவற்றை மட்டமே காண முடிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேரம் செல்லச் செல்ல 200 மீட்டராக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டெல்லியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மூடுபனி மற்றும் மாசு காரணமாக, 45 ரயில்கள் தாமதமானதாக ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.