• Tue. Mar 21st, 2023

ஆந்திராவில் ரசிகர்கள் வராததால் 400 தியேட்டர்கள் மூடல்…

Byகாயத்ரி

Jul 16, 2022

ஆந்திராவில் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை கணிசமாக குறைக்கப்பட்டது.

இதனால் தொகை வசூல் ஆகாததால், நஷ்டத்தில் சினிமா தியேட்டர்களை இயக்க முடியவில்லை என டிக்கெட் விலை குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களை மூடி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சினிமா தியேட்டர் அதிபர்கள் மற்றும் நடிகர்கள் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து டிக்கெட் விலை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சினிமா தியேட்டரில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ஆந்திராவில் முன்னணி நடிகர்கள் நடித்த அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் எதுவும் வெளியாகவில்லை. மேலும் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ரசிகர்கள் சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் 20 முதல் 30 ரசிகர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்து செல்கின்றனர். இதன் காரணமாக தியேட்டர்களுக்கு ஒரு காட்சிக்கு ரூ.2000 முதல் 3000 வரை மட்டுமே வசூலாகிறது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு சினிமா தியேட்டர்களை பராமரிக்க கூட முடியவில்லை. மின்சார கட்டணம் செலுத்த முடியவில்லை. சினிமா தியேட்டர்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி நேற்று முதல் ஆந்திராவில் 400 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தசரா பண்டிகையின்போது முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதுவரை தியேட்டர்களை மூடி வைக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆந்திராவில் ரசிகர்கள் படம் பார்க்க வராததால் 400 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *