• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

ஆசிரியர்களுக்கு 3 மாத சம்பளம்
வழங்கவில்லை: ஓ.பி.எஸ் கண்டனம்

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று ஓ.பி.எஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ மாணவியரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், செயல் வீரர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சிறந்த செல்வமாம் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் உன்னதமான, தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இவர்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசி பணி நாளன்று அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சணக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை கடந்த அக்டோபர் மாதம் நிலவியது.
இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாட்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களாகியும் இந்தப் பிரச்சனை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தற்போது தெரிய வருகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளைத்தான் நிறைவேற்ற முடியவில்லை, அகவிலைப்படி உயர்வை உரிய நேரத்தில் தர முடியவில்லை என்றால், சம்பளத்தைகூட உரிய நேரத்தில் தர முடியாத கையாலாகாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம். பொதுவாக, நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும்போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் உரிய தருணத்தில் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.