• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் அடுத்தடுத்து 3 சிறுத்தைகள் பிடிபட்டதால் பரபரப்பு

Byவிஷா

May 22, 2024

நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே அனவன் குடியிருப்பு பகுதியில் கால்நடைகளைக் கடித்துக் குதறிய சிறுத்தைகளில், 5 நாட்களில் 3 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதால் அங்கு வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது,
பாபநாசம் அருகே அனவன்குடிருப்பு பகுதியில் கால்நடைகளைக் கடித்து குதறி மக்களை அச்சுறுத்தி சுற்றித்திரிந்த 2 சிறுத்தைகள் அடுத்தடுத்து ஒரே நாளில் வனத்துறையினரிடம் பிடிபட்டன. அப்பர் கோதையார் வனப்பகுதியில் ஒரு சிறுத்தை விடப்பட்ட நிலையில், மற்றொரு சிறுத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட உள்ளது.
பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்பட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இதில் சிறுத்தை கரடி போற்ற விலங்குகள் மலையடிவாரம் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வருவதும், அவ்வபோது மனிதர்கள் கால்நடைகளை தாக்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
அதன்படி, மலை அடிவாரத்தில் உள்ள வேம்பையாபுரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் அனவன்குடியிருப்பை சேர்ந்த சங்கர் ஆகியோரது ஆடுகளை சில தினங்களுக்கு முன் சிறுத்தை தாக்கியதன் அடிப்படையில் இரு பகுதிகளிலும் வனத்துறையினர் சார்பாக கூண்டு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வனக்குழுவினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு வேம்பையபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை ஒன்று வசமாக சிக்கியது. பின்னர், அந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அப்பர் கோதையார் வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
இதற்கிடையே, மற்றொரு சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டதால், வேம்பையாபுரம் பகுதியில் வனத்துறையினர் சார்பாக மீண்டும் கூண்டை வைத்தனர். இதேபோல், அனவன்குடியிருப்பு பகுதியிலும் கூடுதலாக மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. அனவன்குடியிருப்பு பகுதியில் 2, வேம்பையாபுரத்தில் ஒன்று என மொத்தமாக 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு அனவன்குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டு ஒன்றில் மற்றொரு சிறுத்தை சிக்கியுள்ளது. அதை வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கூண்டோடு தூக்கி, அடர்ந்த வனப்பகுதியில் திறந்துவிட ஏற்பாடு செய்தனர். அதேவேளையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள வேம்பையாபுரம் பகுதியில் வைத்திருந்த கூண்டிலும் ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில் 3 சிறுத்தைகள் பிடிபட்டதாக தெரியவருகிறது.
இதற்கிடையே, ஒரே நாளில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு சிறுத்தைகள் சிக்கியதால் வனத்துறையினர் அதிர்சசி அடைந்தனர். இதையடுத்து இரண்டு சிறுத்தைகளும் கூண்டோடு கொண்டு செல்லப்பட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆடுகளைக் கடித்து குதறி பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த சிறுத்தைகள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவத்தால் மலையடிவார மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.