உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் அதிமுக நிர்வாகி காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது., தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அமலுக்கு வந்தனர்.
ஒவ்வொரு பகுதியிலும் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் வண்ணம் மண்டல அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தி ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பிரிவு கணவாய் கேட் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது., அதிமுக கொடியுடன் கூடிய காரில் வந்த காராம்பட்டி அதிமுக கிளைச் செயலாளர் கிருபாகரன் என்பவரை இடை மறித்து சோதனை நடத்திய போது, காரில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 3 லட்சம் ரொக்கத்தை உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரிகள் அதிமுக நிர்வாகியான கிருபாகரனிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.