பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.05.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர், 16.04.2025 அன்று நடைபெற்ற உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரும்பாவூர் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில் குலாம் பாட்ஷா என்பவர் நத்தம் பட்டா மாற்றம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
அவரது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று அவருக்கு நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பின்னர் தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் கீழ் து.சரசு க/பெ துரைசாமி என்பவருக்கு மாதம் ரூ.1,000 என்ற விதத்தில் 21 மாதங்களுக்கான முதியோர் ஓய்வூதியம் ரூ.21,000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 282 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட தாட்கோ மேலாளர் திரு.க.கவியரசு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.