பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில் போரில் இந்திய வீரர்களின் வெற்றி மற்றும் தியாகத்தைக் கொண்டாடும் வகையில் 23வது கார்கில் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான போர்களில் ஒன்றான கார்கில் போர், 1999 ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை ஜம்மு காஷ்மீரின் கார்கில்-திராஸ் செக்டார் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ஒட்டிய சில பகுதிகளை பாகிஸ்தான் துருப்புக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த போது நடத்தப்பட்டது. 1999 ஜூலை 26ம் நாளன்று, காஷ்மீரில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இமயமலையில் உயர்ந்த உயரத்தில் அமைந்திருந்த பல மலைகளை இந்திய வீரர்கள் மீண்டும் கைப்பற்றினர். இந்த நாள் நமது வீரர்களின் வெற்றி மற்றும் தியாகத்தை கொண்டாடுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மூன்று மாத கால கார்கில் போரை, இரு நாட்டு மக்களும் என்றென்றும் மறக்கமுடியாதபடி, மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக, இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய்யை தொடங்கியது.
ஊடுருவல்காரர்கள் முக்கியமான இடங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர், அது அவர்களுக்கு உயர் அளவிலான போரில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலனளித்தது. இருந்தபோதிலும், இந்திய இராணுவம் உள்ளூர் கால்நடை மேய்ப்பாளர்களிடம் இருந்து உளவுத் தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தான் ராணுவத்தினரின் நிலைகளைக் கண்டறிந்தது.
இறுதியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தாலும், இந்த நீண்ட போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களில் தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த நாள் கார்கில் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.