விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் முறம்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி சேலைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது இதனையடுத்து நடத்திய விசாரணையில் சரக்கு வாகனத்தில் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையத்திற்கு ரூ. 77 ஆயிரம் மதிப்பிலான 222 சேலைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில் சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர் என்பவர் சேலைகளை கொண்டு சென்றது தெரிய வந்தது.

பின்னர் பறிமுதல் செய்த சேலைகளை சாத்தூர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வடிவேலுவிடம் ஒப்படைத்தனர். மேலும் அதிகாரிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.




