• Thu. Nov 6th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 19ம் தேதியன்று அன்று பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் 2016-17-ம் ஆண்டுக்குப் பின் மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக தமிழக அரசின் சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 200 கோடி வழங்கப்பட்டு, 4 ஆயிரத்து 600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக்குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நபார்டு வங்கி நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.7 ஆயிரத்து 338 கோடி மதிப்பில் 16 ஆயிரத்து 390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதன் அடிப்படையில் வரும் 4 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 200 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதர திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து, மொத்தம் ரூ.9 ஆயிரத்து 588 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 20 ஆயிரத்து 990 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் முதல்கட்டமாக வரும் 2023-ம் ஆண்டில் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் 12 ஆயிரத்து 61 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 680 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,171 கோடி மதிப்பீட்டிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 7 ஆயிரத்து 116 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.2 ஆயிரத்து 535 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சிகளில் 3 ஆயிரத்து 265 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,434 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
மீதமுள்ள சாலைகள் அடுத்த 2 ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். சாலைகள் அனைத்தும் தரமானதாகவும், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் சாலைகளின் மேல்தளத்தை முறையாக வெட்டி எடுத்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. தரமான சாலைகள் அமைக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்நிறுவனத்தால் இறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.