• Thu. Feb 13th, 2025

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு…….

Byadmin

Aug 2, 2021

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுரை மாநகரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரௌடிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் துறையினரால் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 144 ரௌடிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்ற பின்னனி உடைய நபர்கள் மற்றும் ரௌடிகள் 232 நபர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச.-ன் படி நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை காலத்தில் நன்னடத்தை விதிமுறைகளை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 23 எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் ரௌடிகளான முருகன் என்ற லோடு முருகன், காளீஸ்வரன் என்ற கிளாமர் காளி, கண்ணன் என்ற குட்டை கண்ணன், கணக்கன் என்ற முனியசாமி, முத்துராமலிங்கம் என்ற குரங்கு முத்துராமலிங்கம் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதத்தில் 7 ரௌடிகள் உட்பட 2021 ம் வருடத்தில் 44 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதத்தில் 52.435 கிலோகிராம் கஞ்சா உட்பட இந்த வருடத்தில் இதுவரை 771.470 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் 32 காவலர்கள் ஆயுதத்துடன் ரோந்து பணியில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ரோந்து காவலர்களுக்கு நவீன ‘பாடி வோன் கேமராஸ்’ வழங்கப்பட்டு அதன் மூலம் ரௌடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகரில் ரௌடிகள் மற்றும் குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.