மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. கம்ப காமாட்சியம்மன் – 18 ஆம் படி கருப்பசாமி திருக்கோவில். இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே உள்ள கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் மீன்படி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த மீன் பிடி திருவிழாவிற்காக ஓர் ஆண்டுக்கு முன்பு மீன் குஞ்சுகளை நேர்த்திக்கடனுக்காக பொதுமக்கள் வாங்கி கண்மாய்க்குள் விடுவது வழக்கம். கண்மாய் வற்றும் நேரத்தில் கம்ப காமாட்சியம்மன் – 18ஆம் படி கருப்பசாமிக்கு திருவிழா எடுத்து மீன்பிடி திருவிழா நடத்தி இந்த மீன்களை பிடித்து சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவிற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்மாயில் குவிந்து, மூன்று முறை வெடி வெடித்த பின் கண்மாயில் இறங்கி வலைகளை கொண்டு கட்லா, ரோகு, சிலேபி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை அள்ளிச் சென்றனர்.
இந்த மீன்பிடி திருவிழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு 2 கிலோ முதல் 10 கிலோ வரையிலான பெரிய பெரிய மீன்களை பிடித்து சென்றனர்.