• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Byவிஷா

May 3, 2025

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக செயற்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம் வருமாறு:
கடந்த தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களை தந்து, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். நீட் ரத்து விஷயத்தில் கபடநாடகம் நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களின் வாய்ஜாலத்தை மாணவ, மாணவிகளும், மக்களும் இனியும் நம்ப தயாராக இல்லை. எனவே, மக்களிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழி கொள்கை, கல்வி கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என நாடகமாடி கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம். அதிமுக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும். கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில், வெளிநாட்டு முதலீடுகளின் விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
சொத்து வரியில் தொடங்கி, குடிநீர் வரி முதல் குப்பை வரி வரை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கண்டனம். பெண்களை இழிவுபடுத்துகின்ற வகையில் ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பழனிசாமிக்கு பாராட்டும், நன்றியும். சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டும், கொலை, கொள்ளை, போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை என தொடர் சமூகவிரோத செயல்கள் மூலம் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம். தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அதிமுக துணை நிற்கும்.

மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்துவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக, பாஜகவுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு இச்செயற்குழு ஆதரவு அளித்து அங்கீகரிக்கிறது. அதற்காக பழனிசாமிக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்படுகிறது. 2026-ல் மீண்டும் அவரை தமிழகத்தின் முதல்வராக்குவோம் என சூளுரை ஏற்போம். சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது..,
பாஜகவுடன் கூட்டணி வைத்து, மத்திய பாஜக அரசில் திமுக அங்கம் வகித்திருக்கிறது. மிசா காலத்தில் தாக்கப்பட்டவர் தான் ஸ்டாலின். இப்போது, அந்த தாக்குதலுக்கு காரணமான காங்கிஸ_டன் கூட்டணி வைத்திருக்கிறார். அதனால் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து விமர்சிக்க திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் தகுதியில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது தொடர்பாக, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சிப்பதை யாரும் பொருட்படுத்த வேண்டாம்.
திமுக அரசின் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சாதகமான சூழலைக்கூட பயன்படுத்தி, உங்களால் பூத்களில் வாக்குகளை பெற முடியவில்லை என்றால், அரசியலில் இருக்கவே தகுதி இல்லை என்று தான் அர்த்தமாகும். எனவே, எந்த தொகுதியையும் பிற கட்சிகளின் கோட்டை எனக்கருதி, நீங்கள் தேர்தலில் கோட்டைவிட்டுவிட வேண்டாம். 2026 தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். முதலில் அனைத்து பூத்களிலும் கட்சி கிளைகளை 100 சதவீதம் அமையுங்கள்.
சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாடலை அனைவரும் பின்பற்றி, பூத் கிளையை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலை செயலாளர் எஸ்.பி.வேலு மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.