• Fri. Apr 26th, 2024

ஹாலோவின் திருவிழாவில் கூட்ட நெரிசலில் 150 பேர் பலி

தென் கொரியாவில் நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் ஹாலோவின் திருவிழா என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
தற்போதைய இணையதள வளர்ச்சியின் காரணமாகவும், ஓடிடி தளங்களின் வருகை காரணமாகவும் ஹாலிவுட் மற்றும் வெளிநாட்டு சினிமாக்களை காணும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
எனவே ஹாலோவின் என்றால் என்னவென்று பலர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. சினிமா, வெப் சீரீஸ்களில் பார்த்து தெரிந்துகொண்டதன் அடிப்படையில் ஹாலோவீன் என்றால் பேய் என்ற புரிதலுக்கு மக்கள் வருகிறார்கள்.
பூசணிக்காயில் வரையப்பட்ட பேயின் முகம்தான் இந்த பெயரை கேட்டவுடன் பலரது நினைவுக்கு வரும். ஆனால், பலருக்கும் ஹாலோவின் என்ற திருவிழா உலக நாடுகளில் கொண்டாடப்படுவது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிபவர்கள், இந்தியாவில் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஹாலோவீன் திருவிழா பரிட்சயமானதாக இருக்கலாம்.
காரணம் ஹாலோவின் திருவிழா கொண்டாடப்படும் அக்டோபர் 31 ஆம் தேதி ஆண்டுதோறும் பல உலக நாடுகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்கள், கால் செண்டர்கள் சிலவற்றிலும் இந்த நாளில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலும் ஆங்காங்கே ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி ஹாலோவீன் நாள் என்றாலும் அக்டோபர் மாதத்தின் கடைசி சில நாட்களில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலால் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஹாலோவின் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன. இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நூற்றுண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்த ஹாலோவீன் பண்டிகை அமெரிக்கா, கனடா, ஹாங்காங், ஜப்பான், கொரியா ஆகிய பல உலக நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.
ஹாலோவின் திருவிழா என்றால் பேய்களுக்கான திருவிழா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அது உண்மை இல்லை. தமிழ்நாட்டில் அறுவடை நாளை எப்படி பொங்கல் பண்டிகையாக நாம் கொண்டாடுகிறோமோ, அதேபோல், ஐரோப்பிய நாடுகளில் அறுவடை நாளையும், வெயில் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்குவதை குறிக்கும் வகையிலும் ஹாலோவீன் தினம் கொண்டாடப்படுகிறது.
தொடக்கத்தில் ஹாலோவின் நாளன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது மட்டுமே மக்களின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், நாளைடைவில் அது பேய் வேடமிட்டு கொண்டாடும் நாளாக மாறிவிட்டது. உலகமயமாக்கலுக்கு பின் இது மிகப்பெரிய வர்த்தகமாகவும் மாறிவிட்டது.
நமதூரில் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு எப்படி சிறப்பு தள்ளுபடி விற்பனைகள் நடைபெறுமோ அதேபோல் ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு மேற்கத்திய நாடுகளில் தள்ளுபடி விற்பனைகள் செய்யப்படுகிறது. ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஹாலோவீன் தள்ளுபடி விற்பனை நடைபெறுவதை பார்க்க முடியும்.
இந்த ஹாலோவின் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் ஹாலோவின் பார்ட்டிகள் நடைபெறும். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல தரப்பினரும் பேய்கள், ஆவிகள், அமானுஷ்யங்கள், சினிமாக்கள், கார்ட்டூன்களில் பார்த்த பயமுறுத்தும் உருவாங்களைபோல் வேடமிட்டு கலந்துகொள்வார்கள்.
ஹாலோவீன் என்றாலே பலருக்கு நினைவில் வருவது பூசணிக்காய்தான். இந்த பூசணிக்காயை வைத்து பேய் முகம் வடிவமைத்து அதை தலையில் மாட்டிக்கொண்டு ஆடி பாடி கொண்டாடுவது வழக்கம். ஹாலோவீன் பார்ட்டிகளில் கலந்துகொள்பவர்களை பயமுறுத்தும் வகையில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்வார்கள்.
குறிப்பாக நெஞ்சை பதற வைக்கும் பேய் படங்களை போடுவது, அதிர்ச்சியளிக்கும் சில உருவங்களை காட்டி பயமுறுத்துவது, பேய் இசையை ஒலிப்பது, பிராங்க் செய்வது என பல விசயங்களை காட்டியே பயமுறுத்துவார்கள். இப்படி திகிலோடும், கொண்டாட்டத்தோடும் ஹாலோவீன் பண்டிகை மேற்கத்திய நாடுகளில் கழியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *