கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறுகிறது.

இந்த ஆண்டு மாரத்தானில் பங்கேற்க முன் எப்போதும் இல்லாத அளவாக 25,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் மிகச் சுறுசுறுப்பான ஓட்டப்பந்தய நகரங்களில் ஒன்றாக கோவை உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெறும் வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் – இந்த நிகழ்வில் 21.1 கி.மீ அரை மாரத்தான், 10 கி.மீ ஓட்டம், 5 கி.மீ நேர ஓட்டம், 5 கி.மீ நடைப்பயணம் மற்றும் நான்கு பேர் இணைந்து மொத்தம் 21.1 கி.மீ தூரத்தை கடக்கும் கார்ப்பரேட் ரிலே ஆகிய பிரிவுகள் இடம்பெறுகின்றன.
பங்கேற்பாளர்களுக்காக உதவி நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள், பாதை வரைபடங்கள், வழிகாட்டும் தன்னார்வலர்கள், மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மொத்த பரிசுத் தொகையான ரூ.3.85 லட்சமானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும். 21.1 கி.மீ. அரை மாரத்தான் போட்டியில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 60,000, ரூ. 35,000 மற்றும் ரூ. 25,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும். 10 கி.மீ. ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 35,000, ரூ. 25,000 மற்றும் ரூ. 12,500 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
போட்டிக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் மற்றும் பதக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டன. பதிவு செய்தவர்கள் தங்களது டி-ஷர்ட்களை டிசம்பர் 20 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடிஸ்ஸியா ஹால் ‘இ’-யில் நடைபெறும் மாரத்தான் எக்ஸ்போவில் பெற்றுக்கொள்ளலாம்.




