• Wed. May 8th, 2024

130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி.. பயண நேரம் 30 நிமிடம் குறையும்..!

ByA.Tamilselvan

Sep 13, 2022

ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதனால், விரைவு ரயில்கள் தாமதம் குறைவதோடு, பயண நேரமும் குறைந்து வருகிறது.
அதன்படி, தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட முக்கிய வழித்தடங்களான தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் – காஜிப்பேட், ஆந்திர மாநிலம் விஜயவாடா – கூடூர், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா – குண்டக்கல் போன்ற ரயில் சந்திப்புகளில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, இந்த ரயில் பாதைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், தாமதம் இன்றி செல்வதுடன், பயண நேரமும் குறையும்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘விஜயவாடா – கூடூர், ரேணிகுண்டா – குண்டக்கல் உள்ளிட்ட ரயில் பாதைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தடத்தில் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.
தற்போது, ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் விரைவு ரயில்கள் தாமதம் இன்றி செல்லும்.அதேபோல், 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் பயண நேரமும் குறைய வாய்ப்பு உள்ளது. மற்ற வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன’ என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *