• Sun. Jun 16th, 2024

தமிழகத்தில் கோடை மழைக்கு 12 பேர் உயிரிழப்பு

Byவிஷா

May 23, 2024

தமிழகத்தில் கோடை மழைக்கு 12 பேர் உயிரிழந்திருப்பதாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் தமிழகத்துக்கு 12.5 செமீ மழை இயல்பாக கிடைக்கும். இந்நிலையில், மார்ச் 1 முதல் மே 21 வரையில் 11.47 செமீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ராணிப்பேட்டையில் இடி, மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த மே 16 முதல் 21-ம் தேதி வரை கனமழை காரணமாக 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மழைக்கு 19 கால்நடைகள் இறந்துள்ளதுடன், 55 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், மே 24-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதாலும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் நோக்கில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி பேரின் செல்போனுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *