• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலம்

ByKalamegam Viswanathan

Nov 18, 2024

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் சோம வாரத்தை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது .

இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத திங்கட்கிழமைகள் ( சோம வாரம் ) சிவ வழிபாடு செய்பவர்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதால் சிவ வழிபாடு செய்வது சிறப்பு என கூறப்படுவதுண்டு .

மேலும் சோமவார நாட்களில் சிவதரிசனம் செய்தாலும் , சங்காபிஷேகத்தை தரிசிப்பதாலும் , குடும்ப ஒற்றுமை ஏற்படும் , சரீர ஆரோக்கியம் கிடைக்கும் . பிரச்சனைகளை கணவன் மனைவியும் இணைந்து சமாளிக்கும் மனதிடம் உண்டாகும் என்ப ஐதீகம் .

அந்த வகையில் ஒளிமயமான கார்த்திகை மாத திங்கட்கிழமை எனும் வாரத்தில் சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம் . இன்று கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு இம்மையிலும் நன்மை தருவார் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது .

கோவில் வளாகம் கொடி மரம் அருகில் உள்ள நந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்த சங்காபிஷேகத்தில் 1008 சங்குகள் லிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு அதில் புனித நீர் மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. இதனையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்கிட புனித நீர் குடங்கள் கொண்டும், பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சங்குகளில் இருந்த புனித நீர் கொண்டும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.