• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு முழுவதும் 1,000 உழவர் நல சேவை மையங்கள் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

ByP.Kavitha Kumar

Mar 15, 2025

தமிழ்நாடு முழுவதும் 1.000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, ” சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்க மாநில அளவில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று உழவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம், 2025-26-ம் ஆண்டிலும் 55 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
.
மேலும், நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் சிறு,குறு நில உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, இறுதிச்சடங்கு நிவாரணத்தொகை, கல்வி உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும்.

1.000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.42 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றிற்கு ரூ.102 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 3 லட்சம் ஏக்கர் பரப்பில் கோடை உழவு செய்திட ஹெக்டருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும்.

இதற்காக ரூ.24 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.. 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன்பெற சிறுதானிய சாகுபடி, இடுபொருள் விநியோகம், வேளாண் இயந்திரங்கள் மதிப்பு கூட்டுதல் போன்றவற்றிற்கு மானியம் வழங்கிட ரூ. 22 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 20 மாவட்டகளில் செயல்படுத்தப்படும்” என்றார்.