ஸ்வீடனில் உள்ள பள்ளியில் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓரேப்ரோ நகரில் ரிஸ்பெர்க்ஸ்கா என்ற மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வழக்கம்போல் நேற்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளி வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பத்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தனிநபர் நடத்திய தாக்குதலாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும், இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்றும் போலீசார் கூறியுள்ளனர். இது ஸ்வீடன் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது. நாட்டுக்கு இது மிகவும் வலிமிகுந்த நாள் அன்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸ்ஸன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களில் மாணவர்கள் எத்தனை பேர், ஆசிரியர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களை ஸ்வீடன் போலீசார் இன்னும் வெளியிடவில்லை. எதற்காக பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கியால் மர்மநபர் சுட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.