
திருப்பனந்தாள் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்களை சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (41) மரவியபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் 3-ம் தேதி அய்யப்பன் குடும்பத்தினருடன் உறவினர்கள் வீட்டின் சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 14.1/2 பவுன் நகைகளும் மற்றும் மர வியாபாரத்திற்காக வைத்திருந்த ரூ. 4 லட்சம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் பின்பக்க வாழைத் தோட்டம் வழியாக புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடித்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராவில் பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று திருக்கடையூர் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எண்ணை ஆய்வு செய்தபோது மணலூர் மர வியாபாரி வீட்டில் கொள்ளையடித்த நபர் ஓட்டி வந்த வாகனம் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் அய்யப்பன் வீட்டில் கொள்ளையடித்த நபர் என தெரியவந்தது.
பின்னர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் அரியலூர் மாவட்டம் நாகல்குழி மேல தெருவைச் சேர்ந்த சக்திவேல் என்பதும், இவர் தனது நண்பரான ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சரவணன் என்பவருடன் சேர்ந்து அய்யப்பன் வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் 18 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள சரவணணை தேடி வருகின்றனர்.
