

2021ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டிலும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேர்வு மையங்களை அதிகரித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு தாமதமாக நடத்தப்பட்டதால் கடந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையும் சற்று தாமதமானது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை கடந்த ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

