• Wed. Feb 19th, 2025

தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கும் தி.மு.க.., திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் மேயர் பிரத்தியேக பேட்டி…!

By

Aug 11, 2021

சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த், தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், அதிமுக நெல்லை மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர் பள்ளிக்கோட்டை செல்லத்துரை ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து வருவதைத் தொடர்ந்து, தற்போது நெல்லை மாவட்ட அதிமுக முன்னாள் மேயரும் தி.மு.க.வில் இணைந்திருப்பது நெல்லை அ.தி.மு.க வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுதான் தற்போதைய பரபரப்பே!


நெல்லையில் மக்கள் செல்வாக்கு பெற்ற நெல்லையின் முன்னாள் அதிமுக மேயர் புவனேஸ்வரி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். திமுகவில் தற்போது இணைந்திருக்கும் முன்னாள் அதிமுக மேயர் புவனேஸ்வரி அதிமுகவில் இருந்தபோது தீவிரமாக கட்சிப் பணியில் இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட போது தனி ஆளாக திமுக முதல்வர் கருணாநிதியின் கார் முன்பு பாய்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அதிமுக மீதான அவரது தீவிர பற்று, மக்கள் பணியாற்றுவதில் அவரது தனிப்பாணி மற்றும் அவரது நுனி நாக்கு ஆங்கிலம் காரணமாகவே அவருக்கு இந்த வாய்ப்பை ஜெயலலிதா வழங்கியிருந்தார். இந்த நிலையில் தான் நாம் அவரை சந்தித்து பேசினோம். அதிமுகவிலிருந்து விலகியது குறித்து நம்மிடம் குமுறித்தள்ளி விட்டார் முன்னாள் மேயர் புவனேஸ்வரி. அவரிடம் பேசினோம்.


எங்கள் புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் அடிமட்ட தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. அதிலும் பெண்களுக்கு அறவே மரியாதை இல்லை. நான் அதிமுக மேயாராக இருந்த போது மக்கள் நலனே என் நலன் என்று தான் பணியாற்றினேன். அனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கி விட்டது. இதனால் மக்கள் பனி செய்வதற்கு பதில் இவர்களை சமாதானப் படுத்துவதிலேயே அதிமுக முக்கிய பிரமுகர்களின் நேரம் விரயமாகியது. கட்சியில் என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை.

நான் கட்சிப் பணிக்கு வந்ததன் முக்கிய நோக்கம் மக்கள் பணி செய்வது தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அதற்கு வாய்ப்பு இருந்தது. அதனால் தான் வீடு வீடாக சென்று அறிவொளி இயக்கம் மூலமாக கல்விப் பணி செய்ய முடிந்தது. மருத்துவ முகாம்களை நடத்த முடிந்தது. வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிந்தது. தெருக்களுக்கு தமிழ் பெயர் சூட்ட முடிந்தது. முதியோர்களுக்கு மாவட்ட தலைமையிடம் பேசி உதவி தொகையை எளிதாக பெற்று தர முடிந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட இரட்டை தலைமையால் எதுவும் செய்ய முடிய வில்லை. இதனால் மனமுடைந்து இருந்தேன்.


இந்த நிலையில் தான் கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானார். கட்சி தொண்டர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையை பார்த்து நெகிழ்ந்து போனேன். புதிதாக கட்சிக்கு வந்தவர்களை கூட தாயுள்ளத்துடன் வரவேற்று அரவணைத்துக் கொள்வதை அவரிடம் நான் பார்த்தேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னது போல, ‘ அவர் நடந்தது சிவப்பு கம்பளத்தில் தான் என்றாலும் அதன் கீழே எத்தனை முட்கள் இருந்தன என்பது அவருக்கு தான் தெரியும். அதே போல தான் அதிமுகவில் மக்கள் பணி செய்ய எத்தனை தடங்கல்கள் வந்தன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். அதனால் தான் திமுக தலைவரின் தலைமையை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு மக்கள் பணியாற்ற வந்திருக்கிறேன் என்றவர் இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் சொன்னார்.


நான் இயற்கையாகவே இறை பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவள். தலைவரின் மனைவி துர்கா ஸ்டாலினும் இறை பக்தி நிறைந்தவர் என்பதை அவரை நேரில் சந்தித்த போது உணர்ந்து கொண்டேன். அவரது பிரார்த்தனை பலிக்கும் என்பதை உணர்ந்த போது நானும் பெருமிதப்படுகிறேன். என் வாழ்விலும் இலை உதிர்ந்து சூரியன் உதித்திருக்கிறது. முதல்வரின் ஆணைக்கு கட்டுப் பட்டு மக்கள் பணியாற்றுவதே இனி எனது முக்கிய பணியாக இருக்கும் என்று முடித்துக் கொண்டார்.