• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத்துளிகள்

Byவிஷா

Oct 14, 2023

ஆபத்து காலத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு

  காட்டில் பலம் கொண்ட ஒரு யானை வாழ்ந்துவந்தது. அதன் பெரிய உருவம் கண்டு மற்ற விலங்குகளும் பறவைகளும் ஒதுங்கியே இருந்தன. இதனால் யானை நண்பர்கள் இன்றி, தனிமையில் தவித்தது. தன்னோடு நட்புடன் பழக ஒரு நண்பனைத் தேடியது. நாமே சென்று ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தது. வழியில் ஒரு மரத்தில் குரங்கைக் கண்டது.

” குரங்கே, நான் யாருடைய நட்பும் கிடைக்காமல் மிகவும் மன வேதனையில் உள்ளேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” என்றது.அதை கேட்டதும் குரங்கு, ‘ஹி..ஹி…’ என்று சிரித்தது.
“ஏன் சிரிக்கிறாய்?
“யானையாரே, நான் மரத்துக்கு மரம் தாவுபவன். நீரோ தரையில் நடப்பவர். நாம் எப்படி நண்பர்களாக முடியும்? என்னைப் போல உங்களால் மரம் தாவ முடிந்தால் மட்டுமே நட்பு சாத்தியம்” என்று சொல்லி விட்டு ஓடியது.
அடுத்ததாக மரத்தின் மீது அமர்ந்தபடியே ‘கூக்கூ கூக்கூ’ என்று குயில் கூவியதைக் கேட்டது யானை.
‘ஆஹா! என்ன இனிமையான குரல் வளம். இந்தக் குயிலிடம் நட்புகொண்டால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று நினைத்த யானை, ”குயிலே, என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” என்று கேட்டது.
“என்னைப் போல உம்மால் இனிமையாகப் பாட முடியுமா? அப்படிப் பாடுவதாக இருந்தால் நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன்” என்றது குயில்.

யானை சோகத்துடன் திரும்பி நடந்தது. பாதையில் மயில் ஒன்று தன் தோகையை விரித்து அழகாக ஆடிக்கொண்டிருந்தது. மயிலின் ஆட்டத்தைக் கண்ட யானை, மெய் மறந்து நின்றது.
‘ஆஹா! மயில் எவ்வளவு அழகாக ஆடுகிறது! இதனோடு நட்பு கொண்டால் தினமும் இதன் ஆட்டத்தைக் கண்டு ரசிக்கலாம்’ என்று நினைத்த யானை, மயிலிடம் தன் விருப்பத்தைக் கூறியது.
“யானையாரே, நீர் ஆசைப்படுவது விநோதமாக உள்ளது. என் திறமைக்கு முன்னால் நீங்கள் எல்லாம் பூஜ்யம். தள்ளிப் போங்கள்” என்று தோகையை ஆட்டிக்கொண்டே சென்றுவிட்டது.
அப்போது ஓர் எலி வந்தது. உடனே தன் கோரிக்கையை வைத்தது யானை.
“யானையாரே, உம்மோடு நட்புகொள்ள எனக்கும் ஆசைதான். ஆனால் நம் இருவருக்கும் உருவ வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமாக உள்ளது. நீங்கள் என்னைப் போல உருவத்தைச் சிறியதாக்கிக் கொண்டு வந்தால் அப்போது நட்புகொள்ளலாம்” என்றது எலி.
சட்டென்று புதரிலிருந்து வெளியே வந்தது ஒரு புலி. அதன் பிடியில் குரங்கு மாட்டிக்கொண்டு உயிருக்குப் போராடியது. அதன் வேதனைக் குரல் கேட்ட யானை, ஓடிவந்து புலியுடன் போராடியது.யானையின் பலத்தை, புலியால் சமாளிக்க முடியவில்லை. யானை புலியைத் தூக்கி வீசியது.
“என்னை விட்டு விடு. இனி நீ இருக்கும் பக்கமே வர மாட்டேன்” என்று சொல்லி விட்டுத் தலைதெறிக்க ஓடி மறைந்தது புலி. அதுவரை மறைவில் நின்று வேடிக்கை பார்த்த குரங்கு, மயில், குயில், எலி எல்லாம் வெளியில் வந்தன.
“யானையாரே, எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள்தங்களை மிகவும் இழிவாகப் பேசிவிட்டோம். இந்தப் புலியால் பலர் உயிரை இழந்துள்ளார்கள். தக்க சமயத்தில் புலியிடமிருந்து எங்களைக் காப்பாற்றியதுடன் எங்களுடைய கர்வத்தையும் அழித்துவிட்டீர்” என்று உருக்கமாகப் பேசியது குரங்கு.
“என்னையும் மன்னித்துவிடுங்கள். ஆபத்து காலத்தில் உதவுவதுதான் நல்ல நண்பனுக்கும் உண்மையான நட்புக்கும் இலக்கணம் ” என்றது மயில்.
“யானையாரே, உம்மை நண்பராக அடைவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றது குயில்.

தனக்கு நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியை அவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தது யானை.