தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெயிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமையை விளக்கும், வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
முதலில் வெள்ளை அறிக்கை என்றால் என்ன என பார்க்கலாம் வாங்க. ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ, ஒரு நிறுவனமோ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் வெளிப்படையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எந்த விஷயத்தில் ஒரு குழப்ப நிலை நிலவுகிறதோ, சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறதோ, அரசிடம் இருந்து துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெறாமல் உள்ளதோ அந்த விஷயங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆளும் கட்சியை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்துவது வழக்கம்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அரசு சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் அனைத்தும் வெள்ளை நிற அட்டை போடப்பட்ட கோப்புகளில் பத்திரப்படுத்தப்படுமாம். வெள்ளை கோப்புக்குள் இருக்கும் அறிக்கை என்பதை குறிக்கும் விதமாக வெள்ளை காகிதம் என்ற சொல் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களிடம் இருந்து நமக்கு தொற்றிக்கொண்டது, அது பின்னாட்களில் மருவி வெள்ளை அறிக்கையாக மாறியுள்ளது.
1977ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9 வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1977ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
இது குறித்துஅப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வெள்ளை அறிக்கையின் மீது 4 நாட்கள் விவாதமும் நடைபெற்றது.
1981ம் ஆண்டு உணவு பொருட்களின் கையிருப்பு மற்றும் விலையேற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 3 நாட்கள் விவாதமும் நடைபெற்றது.1983ல் தமிழ்நாட்டில் நிலவிய வறட்சி நிலைமை குறித்தும், 1984ம் ஆண்டு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றுள்ளது.
அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு பின் 1994ம் ஆண்டு பெய்த மழை, புயல், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து, அதன் மீது 3 நாட்கள் விவாதமும் நடைபெற்றது. இதேபோல் 1996ம் ஆண்டு ஏற்பட்ட புயல் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.
1998ம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாகவும், 2000ம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி. பிரிவினர்களுக்கு அரசு பணிகளில் வழங்கிய இட ஒதுக்கீடு தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடைசியாக சட்டப்பேரவையில் 2001ம் ஆண்டு தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை தொடர்பாக எந்த விவாதமும் நடைபெற வில்லை. திமுக அரசு ஆட்சி அமைத்த நாளில் இருந்தே வெள்ளை அறிக்கை விவகாரம் விவாத பொருளாக மாறியுள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, கடன் விவகாரம் என பல விஷயங்களிலும் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து திமுகவிடம் வெள்ளை அறிக்கை கோரி வந்தது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வெள்ளை அறிக்கை விடப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆந்திரா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். 2001இல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையம் ஆய்வு செய்தததாக குறிப்பிட்ட அவர், இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நான்தான் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
2006-13 காலகட்டத்தில் 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு வருவாய் உபரியை அடைந்திருந்தது. 2013-ம் ஆண்டு முதல் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை- நிதி அளிக்கும் பொறுப்புகள் ஒத்திவைக்கப்பட்டு பற்றாக்குறைகள் மறைக்கப்பட்டன. நிதிப் பற்றாக்குறையில் ஒரு கணிசமான பங்கு வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக பயன்படுத்துவதால் தற்போதைய நிதிப் பற்றாக்குறை அளவுகள் நிலையற்ற தன்மையுடன் உள்ளது.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை எனவும் 2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் சரியத் தொடங்கி விட்டதாகவும், தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாயாக இருப்பதாகவும் கூறினார்
தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்துவிட்டதை சுட்டிக் காட்டிய அவர் ,கடன் சுமை அதிகரித்து வந்த பாதை குறித்தும் விவரித்தார்.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் இருக்கிறது என்ற அவர், தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,360 கோடியாக சரிந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் பொது துறை நிறுவனங்களான Tangedco மற்றும் போக்குவரத்து கழகங்கள் கடன் பெற 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துள்ளது அரசு எனவும் கூறினார்.
தமிழகத்தில் மொத்த உற்பத்தி 8.7 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் மாநில வருவாய் 4.4 சதவீதமாக சரிந்துள்ளது எனவும் பழனி வேல் தியாகராஜன் விமர்சித்தார்.
தமிழ்நாடு அரசு கடன் மீதான ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். இப்படி அதிமுக அரசின் மீது வரிசையாக பல்வேறு குற்றச்சாட்டுகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுமத்தினார். இந்நிலையில், இந்த வெள்ளை அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அதில் சுந்தர்ராஜன் எதிரே வரும் நபரிடம் வெள்ளைக் காகிதத்தைக் கொடுப்பார். அதன் பின்னர் அவரே, ‘அதுல ஒன்னுமில்ல கீழ போட்டுரு” என்பார். இந்த வீடியோவை அதிமுகவின் பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு கட்சியினரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முறைகேடு செய்த முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும், வெறும் அறிக்கையோடு நின்றுவிட்டால், பழைய 60-40 பங்கீடு பாசத்தில் திமுக நடந்துகொள்கிறதோ என்கிற சந்தேத்தை தவிர்க்க முடியாது எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என்பதற்கு தான் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும்; ஆனால் அது நிர்வாகச் சீர்திருத்தங்களின் மூலமாக செய்யப்பட வேண்டுமே தவிர மக்கள் மீது சுமையை சுமத்துவதன் மூலமாக இருக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாகக் கையாளப்படவில்லை எனவும் ஊழல் மிகுந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அம்மாவின் அரசு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்-ஸும் சாக்குப் போக்குச் சொல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம்தோறும் 1,500 ரூபாயும், இலவச வாஷிங்மெஷினும் வழங்கியிருப்பார்கள்” என தெரிவித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார்.