

தமிழகத்திலேயே தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று நேரத்திற்கு முன்பு அவர் காலமானார்.
மதுரை ஆதீனத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.
தஞ்சை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அருணகிரி நாதர், 1975ம் ஆண்டு மே 27ல் மதுரை ஆதீனத்தின் இளவரசராக பொறுப்பேற்றவர். 1980 மதுரை ஆதீனமாக போட்டியின்றி நியமிக்கப்பட்டார். அன்று முதல் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் ஞானசம்பந்த தேசிகர் வடமாச்சாரியார் சுவாமிகள் என அழைக்கப்பட்டு வந்தார். மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றது முதல் பல ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார்.
தமிழுக்கும் சைவ மறைக்கும் எண்ணற்ற தொண்டாற்றிய மதுரை ஆதீனத்தின் மறைவுச் செய்தி தமிழக மக்களை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆதீனத்தின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவில், “ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

