மதுரை – நத்தம் மேம்பாலத்தில் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு பைக்கில் பறந்து விபத்துக்குள்ளாகி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை – நத்தம் செல்லும் சாலை யில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாலம் பல நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலை குறைக்க இந்த பாலம் திறக்கப்பட்டது. ஆனால், பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில், இந்த பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த பாலத்தை இளைஞர்கள் ஜாலி ரெய்டுக்கு பயன்படுத்தி;க் கொள்கின்றனர். இதைத் தடுக்கவும், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கண்காணிக்கவும் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை இணைந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளன. இதன் மூலம் போலீஸார் கண்காணித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் திருவிழா, பண்டிகை காலங்களில் இந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. ஆனாலும், பைக் ரேஸ் பிரியர்களின் அட்டூழியம் தொடர்கிறது. இதனால் மற்றபொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். பைக் ரேசர்களால் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் பாலத்தில் செல்லவே தயங்குகின்றனர். இந்நிலையில், நேற்று நத்தம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் 2 பெண்கள் சிறிது வேகமாக சென்றனர். அவர்கள் பின்னால் வந்த 2 இளைஞர்களும் வேகமாக சென்றனர்.
“நீ முந்து, நான் முந்து’ என இரு மோட்டார் சைக்கிள்களும் பாலத்தில் வேகமாக செல்லவே ஒரு கட்டத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 4 பேரும் காயமடைந்தனர். இக்காட்சிகளை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து வைரலாக்கினார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல ரேஸ் பைக்குகளில் வேகமாக செல்வோர் அக்காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
இவர்களது செயலால் சாலையில் செல்லும் பொது மக்கள் மரண பயத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இது போன்று உயர்ரக பைக்குகளில் வேகமாக செல்வோரை கண்காணித்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேசர்களை தடுக்க போலீஸாரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.